அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க உத்தரவிட்ட விவகாரம்:அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

எதிர் வரும் செப்டம்பர் 1-ம் திகதி  முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் என்ற அரசின் உத்தரவில் தற்போது தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை,அவசர வழக்காக விசாரிக்க இயலாது என கூறியுள்ள உயர்நீதிமன்றம் பட்டியலில் வழக்கு வரும்போது மட்டுமே விசாரணைக்கு ஏற்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் மற்றும் காப்பீட்டுச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் ஆவணங்களை வைத்திருக்க வைத்திருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அவர் தாக்கல் செய்த மனுவில் வாடகை மற்றும் அலுவலக வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்களது ஓட்டுநர் உரிமத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டு தான் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரசின் இந்த திடீர் உத்தரவால் அவர்கள் அசல் உரிமத்தை எடுத்து செல்ல இயலாது என்று தெரிவித்திருந்தார்.

ஒருவேளை எதிர்பாராத விதமாக அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்தால், புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிக்கல்கள் மற்றும் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக அலைக்கழிக்கப்படுவார்கள் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மக்கள் நலன் கருதி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று, மேலும் இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என டிராபிக் ராமசாமி மனுவில் கூறியிருந்தார். மனு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் டிராபிக் ராமசாமியின் மனு இன்று விசாரணைக்கு வரவில்லை.

இதனையடுத்து தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு டிராபிக் ராமசாமி தரப்பில் கோரப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளதும், வழக்கு பட்டியலிடப்படும் போது மட்டுமே விசாரணகை்கு ஏற்று கொள்ளப்படும் என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

Comments

comments